January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செயற்பாடுகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரின் கருத்தால் சர்ச்சை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செயற்பாடுகள் மற்றும் வீகர் முஸ்லிம்கள் மீதான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்து, சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, காஷ்மீரில் இந்தியா என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பதைப் புறக்கணிக்கும் உலகம், ஸிங்சியாங்கில் சீனாவின் நடவடிக்கைகளைக் குற்றம்சாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு இம்ரான் கான் வழங்கிய நேர்காணல், பாகிஸ்தான் மற்றும் இந்தியா என இரு நாடுகளிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அல்கைதா, ஐஎஸ் மற்றும் தாலிபான்களுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த, அமெரிக்கா பாகிஸ்தானில் சிஐஏ தளத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அமெரிக்க படைகளை நீக்கிக்கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியமாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானை அமெரிக்கா ஒரு தளமாகப் பயன்படுத்துவதை இம்ரான் கான் தொடர்ந்தும் எதிர்த்து வரும் நிலையில், அது அவருக்கு பாகிஸ்தானில் வரவேற்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

எனினும், வீகர் முஸ்லிம்கள் தொடர்பான கருத்துக்கு பாகிஸ்தானில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கைகள் தொடர்பாக இம்ரான் கான் கருத்து வெளியிட்டதால், இந்தியாவிலும் இவ்விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.