File Photo
மியன்மாரில் இராணுவ ஆட்சியைக் கண்டித்து ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை இலங்கை தவிர்த்துகொண்டுள்ளது.
2021 பெப்ரவரி மாதத்தில் மியன்மாரில் ஆங் சான் சூ சி தலைமையிலான ஆட்சியை சூழ்ச்சியின் மூலம் கவிழ்த்த இராணுவம், அங்கு இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியது.
இந்நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூ சி உள்ளிட்ட மியன்மாரின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், அமைதியாகப் போராடிவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டிருந்தது.
அத்துடன், அந்தத் தீர்மானத்தில் மியன்மாருக்கு ஆயுத விற்பனையை உலக நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததுடன், பெலருஸ் அரசு மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளது.
இதேவேளை இலங்கை இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் மியன்மாருக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட மேலும் 35 நாடுகளும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.