May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மியன்மாரின் இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்வது போன்றே உள்ளது”

இலங்கை அரசாங்கம் “பிம்ஸ்டெக்” அமைச்சரவை கூட்டத்திற்கு மியன்மாரின் தற்போதைய வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்தமையானது, அங்கு நிலவும் இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொண்டதாகவே உள்ளது என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பிம்ஸ்டெக்” அமைச்சரவை கூட்டத்திற்கு மியன்மாரை அழைக்க நடவடிக்கையெடுத்தமைக்கு சர்வதேச உறவுகள் பற்றிய அதிக அறிவு அரசாங்கத்திற்கு இல்லாமையே காரணம் என தாம் நினைப்பதாகவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

மியன்மாரில் நடந்த இராணுவமயமாக்கல் சர்வாதிகார ஆட்சிக்கு மத்தியில், இலங்கை இந்த அழைப்பை விடுத்துள்ளதானது அந்த ஆட்சியை ஏற்றுக்கொள்வதை போன்றே உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஏப்ரல் 1 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள “பிம்ஸ்டெக்” அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மியன்மாரின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் வுன்னா முவாங் எல்வினுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த கடிதம், வுன்னா முவாங் எல்வினை அங்கீகரிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்தும், கடிதத்தை மீளப் பெற கோரியும், தாம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியும் மியன்மார் பிரஜைகள் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை தற்போது பிம்ஸ்டெக்கின் தலைவராக உள்ளதன் காரணமாகவே குறித்த நிகழ்வுகளுக்கு அதன் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும், மியான்மாரில் நடந்த இராணுவ சதித்திட்டத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.