
உலகின் வறிய நாடுகளிடையே 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக பகிர்ந்தளிக்க ஜி 7 நாடுகள் முன்வந்துள்ளன.
பிரிட்டனில் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த உச்சி மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தொற்று நோய்க்குப் பின்னர் முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டில் பருவ நிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில், அடுத்த ஆண்டுக்குள் பிரிட்டன் 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் என பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார்.
அதில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் எனவும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகையில் 6.2 வீதமானவர்கள் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்தும் பணக்கார நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது.
இதனிடையே ஜி 7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளன.
அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளிடையே பகிர்ந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு ஜி 7 நாடுகள் 100 கோடி தடுப்பூசிகளை அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக ஒரு பில்லியன் டோஸ் கொவிட் -19 தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்க ஜி 7 நாடுகள் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன.
இது தடுப்பூசி தொகையில் 80 வீதமானவை.ஐ.நா ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ், வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் ஜி 7 நாடுகள் தெரிவித்துள்ளன.