
மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி ஆங் சான் சூ சி மீது இராணுவ அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
ஆங் சான் சூ சி மீது பணம் மற்றும் தங்கத்தில் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக இராணுவத்தினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இது ஆங் சான் சூ சி மீது முன்வைக்கப்பட்டுள்ள மிகப் பாரதூரமான குற்றச்சாட்டு என்பதோடு, குற்றம் நிரூபிக்கப்படும் போது 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அவர் 6 இலட்சம் அமெரிக்க டொலர் பணமும் 7 தங்கக் கட்டிகளும் இலஞ்சமாகப் பெற்றுள்ளதாக மியன்மார் இராணுவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிவில் அரசாங்கமான ஜனநாயகத்துக்கான தேசிய லீக், நாட்டின் நில ஒப்பந்தங்களில் அதிகமான தொகை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
பொதுமக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியது, சட்ட விரோத தொடர்பாடல் கருவிகளை இறக்குமதி செய்தது உட்பட மேலும் 6 குற்றச்சாட்டுக்கள் சூ சி மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
மியன்மாரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, சூ சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.