இஸ்ரேலுக்கும் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்த தீர்மானத்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்,
மேலும் மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட பிரார்த்தனை செய்யுமாறு கத்தோலிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையே காஸா முனையில் கடந்த 11 நாட்களாக கடும் சண்டை இடம்பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அந்தப் பகுதியில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தை காஸா முனையில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ”ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவந்தமை தொடர்பில் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், அமைதிக்கான பாதைகளைத் தொடர நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று வத்திக்கான் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ”இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் மன்னிப்பின் பாதையைக் காணவும், அமைதியையும் நீதியையும் கட்டியெழுப்பி அவர்களிடையே சகவாழ்வு ஏற்படவும் அனைத்து சமூகத்தவர்களும் பிரார்த்திக்க வேண்டும்” என்றும் பரிசுத்த பாப்பரசர் கூறியுள்ளார்.