February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்படதாக இந்தோனேசிய கடற்படை தகவல்!

53 பணியாளர்களுக்குக் காணாமல் போன கப்பல் ஆழ்கடலில் முழ்கியிருக்கலாம் என இந்தோனேசியாவின் கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள்  என நம்பப்படும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்படதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கப்பலில் இருந்த 53  பணியாளர்களும் இறந்திருக்கலாம் என இந்தோனேசிய இராணுவம் கவலை வெளியிட்டுள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி நான்காவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது. இதற்கு உதவும் வகையில் அமெரிக்கா தனது பி- 8 போஸிடான் விமானத்தை அனுப்பியது.

குறித்த கப்பலில் 72 மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான ஒக்சிஜன் உள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி தெரிவித்திருந்தார்.

கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து சனிக்கிழமை அதிகாலையுடன் 72 மணி நேரம் கடந்துள்ள நிலையில், கப்பலில் இருந்தவர்களின் நிலை குறித்து மீட்புக் குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

44 ஆண்டுகள் பழைமையான “கே.ஆர்.ஐ.நங்கலா 402” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல், வடக்கு பாலி கடற்பரப்பில் டார்பிடோ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, காணாமல் போனதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்திருந்தது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தோனேசிய இராணுவம் குறிப்பிட்டது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கப்பல்களை அனுப்பி மீட்புப் பணியை வலுப்படுத்தியுள்ளன.

இந்த தேடலில் 400 க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பல் அதன் அதிகபட்ச இயக்க ஆழத்திற்கு அடியில் விழுந்திருந்தால், நீர் அழுத்தம் காரணமாக  வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல்- மின்சாரத்தால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் 500 மீட்டர் ஆழம் வரை இயங்கக்கூடியது. ஆனால் பாலி கடற்பரப்பில், 1,500 மீட்டாருக்கும் அதிகமான ஆழத்தை அடைய முடியும்.

அந்த வகையில் நீர்மூழ்கிக் கப்பல் இயக்கத்தின் போது மின்சாரத்தை இழந்திருக்கலாம் என்றும், 600- 700 மீட்டர் (1,968- 2,296 அடி) ஆழத்திற்குக் கீழ் சென்றிருந்தால், அதன் இயங்கக்கூடிய வரம்புகளுக்கு அப்பால், அவசரகால நடைமுறைகளை மேற்கொள்ள முடியது போயிருக்கலாம் என்றும் இந்தோனேசியாவின் கடற்படை ஆராய்ந்து வருகின்றது.

நீர்மூழ்கிக் கப்பல் அதன் “அதிகபட்ச ஆழத்தில்” தொலைந்திருந்தால், அதை மீட்டெடுப்பது கடினம் என கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை, கப்பல் ஆழத்திற்குச் செல்லாது இருந்தாலும், அதில் உள்ளவர்களுக்குத் தேவையான ஒக்சிஜன் இன்று அதிகாலையுடன் முடிந்திருக்கும் என்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனிடையே, கப்பல் காணாமல் போன பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலில் இணைக்கப்பட்டுள்ள பாகங்கள் அல்லது கூறுகள் என நம்பப்படும் பல பொருட்களை  கண்டுபிடித்துள்ளதாகவும் அவை வெளியில் இருந்து அழுத்தம் அல்லது விரிசல் ஏற்படாவிட்டால் கப்பலில் இருந்து வெளியே வராது” என்று இந்தோனேசிய கடற்படை தெரிவிக்கின்றது.

இவை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில்,  10 மைல் (16 கி.மீ) சுற்றளவில் வேறு எந்தக் கப்பல்களும் கடந்து செல்லவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கப்பலில் இருந்த 53  பணியாளர்களும் இறந்திருக்கலாம் என இந்தோனேசிய இராணுவம் தெரிவிக்கின்றது.