“கொவிட் தடுப்பூசிகளின் உலகளாவிய விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வை அவதானிக்க முடிவதாக” உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர் மத்தியில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பணக்கார நாடுகளில் சராசரியாக, நான்கு பேரில் ஒருவருக்கு கொவிட் -19 தடுப்பூசி கிடைத்துள்ள நிலையில், இது வறிய நாடுகளில் 500 க்கும் அதிகமானவர்களில் ஒருவருக்கே தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையை பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள “அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த நிலைமையைச் சமாளிக்கும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனம் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் கோவாக்ஸ் திட்டத்தை வழிநடத்துகிறது.
இதுவரை, கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் சுமார் 100 நாடுகளுக்கு 38 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் கோவாக்ஸ் திட்டத்தின் ஊடாக மார்ச் மாத இறுதிக்குள் உலகளவில் குறைந்தது 100 மில்லியன் டோஸ்களை விநியோகிக்க உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்த்தது.
இந்நிலையில், மே மாதத்துக்குள் தமது இலக்கை அடைய முடியும் என்று நம்புவதாக டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
கோவாக்ஸ் திட்டத்தின் ஊடாக 190 நாடுகளுக்கு இடையே ஒரு வருடத்திற்குள் இரண்டு பில்லியினுக்கும் அதிகமான தடுப்பூசியைப் பகிர்ந்தளிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் நம்புகிறது.
பணக்கார நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் அதே நேரத்தில் குறிப்பாக, 92 ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தின விசேட திருப்பலியில், “உலகின் மிகவும் வறிய நாடுகளுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு” பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.