January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை மோதி பொலிஸ் அதிகாரியைக் கொன்ற சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புக் கடவை அருகே காவல்துறை அதிகாரிகள் மீது காரை செலுத்திய சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காரினால் மோதுண்டு காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நாடாளுமன்ற வளாகம் அருகே, காவல் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் காரை மோதிய சந்தேகநபர், காரில் இருந்து பாய்ந்து இறங்கி கையில் கத்தியுடன் தொடர்ந்தும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

இதன்போது, காவல்துறை அதிகாரிகள் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்; காயமடைந்த சந்தேகநபர் பின்னர் உயிரிழந்தார்.

காரினால் மோதுண்டு காயமடைந்த இரண்டு அதிகாரிகளும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு உடனே கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகப் பகுதியும் அண்டிய வீதிகளும் உடனடியாக முடக்கப்பட்டன; இப்போது அப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் ‘பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டது அல்ல’ என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.