அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் ஆறு ஆசிய அமெரிக்க பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு அட்லான்டாவின் புறநகரில் உள்ள எக்வொர்த் என்ற பகுதியில் ஒரு மணிநேரத்துக்குள் மூன்று வெவ்வேறு மசாஜ் ஸ்பா நிலையங்களில் புதன்கிழமை அதிகாலை குறித்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது சந்தேக நபர் ஒருவர் கைதாகியிருப்பதாகவும் அவரே மூன்று இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாவது துப்பாக்கிச் சூடு செக்ரோக்கீ பகுதியின் அக்வொர்த் என்ற இடத்தில் உள்ள யங் ஏஷியன் மசாஜ் பார்லரில் நடத்தப்பட்டது.
இதன்போது சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் இருவர் ஆசியர்கள் ஆவர்.
இதனைத் தொடர்ந்து வடகிழக்கு அட்லான்டாவின் உள்ள கோல்ட் ஸ்பா என்ற பார்லரில் அடுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அங்கு மூன்று பெண்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இந்த கோல்ட் ஸ்பா அமைந்துள்ள சாலையின் மற்றொரு புறத்தில் இருந்த அரோமாதெரபி ஸ்பாவுக்குள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக கருதப்படும் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இதுவே மூன்றாவது தாக்குதலாக பதிவாகியுள்ளது.
இந்த சம்பவங்களின் போது பதிவான, சி.சி.டிவி காணொளியைக் கொண்டு சந்தேக நபரான ரோபர்ட் ஆரோன் லாங் என்பவரை தெற்கு அட்லாண்டாவின் கிறிஸ் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உலகில் கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் வைரஸ் பரவலுக்கு வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களே காரணம் என்ற அடிப்படையில் அமெரிக்கர்கள் சிலர் வெறுப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் பின்னணியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள போதிலும் இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் இது இன ரீதியான தாக்குதல் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பேர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்களாவர்.
பாலியல் தொழிலுடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து குறித்த நபர் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிய வம்சாவளியினர் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.