மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் முறியடிக்க முற்பட்டவேளை அதிர்ச்சி காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யங்கூனில் நீர்த்தாரை பிரயோகங்கள், சத்தக்குண்டுகள், வானைநோக்கி துப்பாக்கி பிரயோகம் போன்றவற்றில் பொலிஸார் ஈடுபட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்டனர்.
இதன்போது காயமடைந்த பலரை சக ஆர்ப்பாட்டக்காரர்கள் மருத்துவமனைகளிற்கு கொண்டு சென்றுள்ளனர்.இதன்காரணமாக நடைபாதைகளில் இரத்தக்கறைகள் காணப்படுவதாக மியன்மார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மார்பில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டவேய் என்ற பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் என அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.
மண்டலாயில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என இரவாடி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பகோ நகரில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என அவசர சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.