November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு

(Photo:The Swift Life Myanmar/Twitter)

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மியன்மார் தலைநகர் நேபிடாவில் கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது 20 வயதான மியா த்வே த்வே கைங் என்ற பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் இவரின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ”இந்த மரணம் அநீதியானது, நாங்கள் மரணத்திற்கான காரணத்தை பதிவு செய்து நாங்கள் நீதிக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போராட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.