November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்: பெண்ணின் தலையில் துப்பாக்கிச் சூடு

(Photo: Save Myanmar/Twitter)

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.  இதில் பெண்ணொருவரின் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயத்துக்குள்ளாகியுள்ளார்.

மியன்மார் நேபிடா என்ற நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியதுடன் தண்ணீர் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதன்போது அங்கிருந்த பெண் ஒருவரின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததுடன் அதே இடத்தில் சரிந்து விழுந்தார்.

அத்தோடு உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதுடன் தற்போது அந்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண்ணின் மூளை செயல் இழந்துவிட்டதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மியன்மார் நாட்டில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிரடியாக இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் ஓர் ஆண்டுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும் அவசர நிலை பிரகடனம் அமுலில் உள்ள நிலையிலும் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மியன்மாரின் நேபிடா நகரில் இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டத்தின் போது பொலிஸார் போராட்டத்தைக் கலைப்பதற்கு இறப்பர் குண்டுகளால் சுட்டதாகவும் இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.