File Photo : Twitter /@DanielPearlFNDN
அமெரிக்க பத்திரிகையாளர் டானியல் பேர்ளை கடத்தி படுகொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
வோல்ஸ்ரீட் ஜேர்னலின் தென்னாசிய பணியகத்தின் தலைவராக பணியாற்றிக்கொண்டிருந்த டானியல் பேர்ள் 2002 இல் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சப்பாத்து குண்டுதாரி என அழைக்கப்படும் பிரிட்டனின் ரிச்சட் ரீட் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே டானியல் பேர்ள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
டானியல்பேர்ள் கொல்லப்படுவதை படமெடுத்து பயங்கரவாதிகள், அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து 2002 இல் நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களில் பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இதேவேளை கடந்த வருடம் சிந்து மாகாணத்தின் உயர் நீதிமன்றம் மூவரின் தீர்ப்பை இரத்து செய்ததுடன் ஏழு வருட சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.
குறிப்பிட்ட மூவரும் கடந்த 18 வருடங்களாக ஈடுசெய்ய முடியாத பாதிப்பையும் தீமையையும் அனுபவித்தனர் என தெரிவித்திருந்த நீதிமன்றம் பின்னர் அவர்களை டிசம்பரில் விடுதலை செய்திருந்தது.
எனினும் டானியல் பேர்ளின் குடும்பத்தவர்களும் பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்த தீர்ப்பிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு எதிராகவே நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து டானியல்பேர்ளின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.