July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானின் ‘கோரின் குரல்’ வானொலி ஊடகவியலாளர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் வசித்து வந்த பிஸ்மில்லா ஆதில் அய்மெக் என்ற 28 வயது ஊடகவியலாளரே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு, காரில் திரும்பி வரும் போதே ஊடகவியலாளர் அய்மெக் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாவது ஊடகவியலாளர் ஆவார்.

பிஸ்மில்லா ஆதில் அய்மெக் ‘கோரின் குரல்’ என்ற வானொலியின் தலைமை ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கெனி இந்த படுகொலையைக் கண்டித்துள்ளதுடன் தனது அரசாங்கம் தொடர்ந்தும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘தாலிபான் அல்லது வேறு எந்தப் பயங்கரவாத அமைப்பாலும் ஊடங்களின் நியாயமான குரல்களை அடக்க முடியாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.