பாகிஸ்தானிற்குள் நுழைந்து தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு இந்தியா திட்டமிடுகின்றது என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட் குரேசி தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடுகின்றது. எங்கள் புலனாய்வு பிரிவினர் மூலம் எங்களிற்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது என பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தாக்குதலை மேற்கொண்டால் பாகிஸ்தான் பதில் தாக்குதலை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் ஆபத்தான விடயம் என தெரிவித்துள்ள பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், இந்தியா தனது சகாக்கள் என கருதும் முக்கிய நாடுகளிடமிருந்து இந்த தாக்குதலிற்கான ஆதரவை பெற முயல்கின்றது எனவும் தான் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தாக்கினால் அதற்கு கடுமையான தாக்குதலை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் தயார்.பாகிஸ்தான் பதில் நடவடிக்கையை எடுப்பதற்கு முழுமையாக தயாராக உள்ளது. இந்தியாவின் திட்டங்களை தோற்கடிக்க தயாராகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் தாக்குதல் திட்டம் குறித்து திட்டவட்டமான தகவல்கள் கிடைத்துள்ளன என பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூட் யூசுவ் தெரிவித்துள்ளார்.