January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை

கொவிட் -19 வைரஸ்  பரவல் தாக்கங்களினால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைக்கும் அரசங்கத்தின் விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக சென்றவர்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் வைரஸ் பரவல் முதல் அலையாக பரவ ஆரம்பித்த போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் இலங்கையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையாக பரவ ஆரம்பித்த பின்னர் ஏற்பட்ட மோசமான நிலைமைகளை கருத்தில் கொண்டு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அரசாங்கம் இவ்வாறு இலங்கையர்களை நாட்டிற்கு வரவழைக்கும் நடவடிக்கையை நிறுத்தியது.

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தற்காலிக வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கில் இருந்து குறிப்பிட்ட சிலர் மாத்திரம் நாட்டுக்கு வரவழைக்கப்பட்ட பின்னர் மீண்டும் இந்த தடை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைக்கும் வேலைத்திட்டத்தை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.