May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர் இலங்கையர்கள் எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்”: மகிந்த ராஜபக்‌ஷ

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் எந்தவித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்” என்று புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்கள் சிலரை சந்தித்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருகை தந்த புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம்.“குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால் பலர் நாட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து வெளியேறியுள்ளமை எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

எமது அரசு உங்களுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன் உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால் நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தலாம். குளிர், பனி என்று பாராமல் உங்களை வருத்தி நீங்கள் உழைக்கும் பணத்தை உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு எமது அரசு என்றும் உங்களுக்கு பக்க பலமாக செயற்படும்.

எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய, வளம் கொழிக்கும், உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து பயணிப்போம்”என்று புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.