May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தொடர்ந்தும் எங்களை ஏமாற்ற முயலாதீர்”

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அரசியல் தீர்வற்ற வெறும் நல்லிணக்கக் கொடியைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் ஜனாதிபதியினடம் சம்பந்தன் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, இந்திய – இலங்கை ஒப்பந்தம், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, அடுத்த புதிய பாராளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேவேளை, இந்த நாடாளுமன்றத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்களை மீண்டும் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.