May 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நலிவுற்ற மக்களின் மீட்பர்’ இயேசு பாலன் பிறந்தநாள்

உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ம் திகதியை கிறிஸ்து பிறப்பு பெருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

மனிதகுலத்தை பாவத் தளையிலிருந்து மீட்க மனித ரூபத்தில் பூவுலகில் அவதரித்த இறைமகன் இயேசு உலக அமைதியின் அடையாளமாக திகழ்கின்றார்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களிடத்தில் அன்பையும் நல்வாழ்த்துக்களையும் பரிசுப் பொருட்களையும் பகிர்ந்துகொள்ளும் நன்னாளாக கிறிஸ்து பிறப்பு நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி, இஸ்ராயேல் மக்களை இறைவாக்கினர்கள் மூலம் வழிநடத்திச் சென்ற இறைவன் இறுதியில் தனது ஒரே பேறான மகனை பூவுலகிற்கு அனுப்புவதாக வாக்களிக்கின்றார்.

இந்த வாக்குறுதியை “இருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். இதனால் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று” என ஏசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கின்றார்.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இந்நிகழ்வு ‘பாலன் இயேசுவின் பிறப்பு’ என நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்து பிறப்பு ஆலயம்- பெத்லகேம்

கபிரியேல் வானதூதர் மரியாள் முன்னால் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று வாழ்த்தி, “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்று கூறுகிறார்.

இதனால் கலக்கமடைந்த மரியாள்,”இது எங்ஙனம் நிகழும் நான் கன்னியாயிற்றே” என தயங்குகிறார். பின்பு இறைவனின் திட்டத்திற்கு தன்னை தயார் செய்து, இறைவனின் சித்தத்திற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கின்றார்.இந்நிகழ்வு ‘கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு’  பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இயேசுவை வயிற்றில் சுமந்த மரியாளும் அவரது கணவர் யோசப்பும், யூதேயா அரசன் அகுஸ்து சீசரின் கட்டளைக்கு ஏற்ப மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்வதற்கென நாசரேத்திலிருந்து யோசப்பின் சொந்த ஊரான பெத்லகேமுக்கு செல்கிறார்கள்.

அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. குழந்தை இயேசுவைப் பிரசவிப்பதற்கு ஏதெனும் இடம் கிடைக்காதா என சத்திரம் சாவடி என எல்லா இடங்களிலும் அவர்கள் தஞ்சம் தேடி அலைகிறார்கள்.

இறுதியில் இறைமகனின் பிறப்பு மாட மாளிகையிலோ கூடகோபுரத்திலோ அல்லாமல் மாட்டுத் தொழுவத்திலேயே நிகழ்ந்தது. பிறந்த பாலகனை கிடத்துவதற்கு அன்னை மரியாளுக்கு மாட்டுத் தீவனத் தொட்டி தான் கிடைத்தது.

இயேசு பிறந்த இடம்- கிறிஸ்து பிறப்பு ஆலயம், பெத்லகேம்

இயேசு பிறப்பின் நற்செய்தி வானதூதரால் இடையர்களுக்கு  முதன்முதலில் அறிவிக்கப்படுகின்றது. ஏழை எளிய மற்றும் நலிவுற்ற மக்களின் மீட்பராக அவதரித்த பாலகனை அவர்கள் தேடிவந்து பணிந்து வணங்கினார்கள்.

இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் வானிலே தோன்றியது. இதனைக் கண்ட ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவைக் கண்டு பணிந்தார்கள். பொன், தூபம், வெள்ளைப் போளம் ஆகிய பரிசுப் பொருள்களையும் அவர்கள் இயேசுவுக்கு பரிசாகக் கொடுத்தனர்.

அன்று இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுத்த மீட்பர் இயேசுவின் பிறப்பு, இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், கொடிய நோய்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் உலக மாந்தர்க்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வேண்டும் என்று விசுவாசிப்போமாக.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்த்துக்கள்!