மியன்மாரில் குற்றக் கும்பலொன்றிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து குறித்த குற்றக்கும்பலுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ‘சைபர் கிரிமினல் ஏரியா’ எனப்படுகின்ற சைபர் குற்றப் பிரதேசத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கிருந்து தப்பிவந்த சில இளைஞர்கள் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சுற்றுலா வீசாவில் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர், யுவதிகள் இவ்வாறான குற்றக் கும்பலிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை பயன்படுத்தி இணைய மோசடிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியன்மாரின் மியாவெட்டி நகரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரதேசம் முழுமையாக குறித்த குற்றக் கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கை தூதரகம் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள நேரிட்டுள்ளது.