November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு செலவுத் திட்டம் – 2024

2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரச வருமானத்தை அதிகரிப்பதாக இருந்தால், வரியை அதிகரிக்க நேரிடும் என்று ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

இதேவேளை அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,

*சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு புதிய கடன் வசதி திட்டம்.

*முதியோர் கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு.

*விதவை மற்றும் ஆதரவற்றோருக்கான பங்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து 8 வீதம் வரை உயர்வு.

*அங்கவீனம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 7500 ரூபாவால் அதிகரிப்பு

*கர்ப்பிணி தாய்மாருக்கான 4500 ரூபா மாதாந்த கொடுப்பனவு திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்தத் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..

*சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக கடந்த வருடங்களில் செலவிடப்பட்ட நிதி 3 மடங்காக அதிகரிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு அஸ்வெசும திட்டத்திற்கு ஒதுக்கப்படும்

*ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் மாதாந்த ஓய்வூதியம் 2500 ரூபாவால் அதிகரிப்பு
சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்த 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

*கித்துல்கல படகு சவாரி பகுதி, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் அதனை சூழ அமைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்கள் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்.

*பாரிய அரச வங்கிகள் இரண்டின் பங்குகளில் 20 வீதம் மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என யோசனை

*புதிதாக வருமான அதிகார சபையை ஸ்தாபிக்க யோசனை.

*அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுக்கு முழுமையான அதிகாரமுடைய டிஜிட்டல் அதிகார சபையை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் –

*2024 ஆம் ஆண்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்படும்-

*அடுத்த வருடத்தில் மேல் மாகாணத்தில் போக்குவரத்து சபையுடன் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் 200 பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

*மத்திய அதிவேக வீதியில் கடவத்தையில் இருந்து மீரிகம வரையான பகுதியை சீன நிதியுதவியுடனும் கலகெதரவில் இருந்து கண்டி வரையான பகுதியை ஜப்பான் நிதியுதவியுடனும் நிர்மாணிக்க நடவடிக்கை

*பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும் மாகாண மட்டத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பண்டாரவளை பொருளாதார மத்திய நிலைய நிர்மாணம் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அரசாங்கத்தின் பங்களிப்பாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

*3 வருட காலத்தில் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பில் அனுராதபுரம் சர்வதேச பௌத்த நூலகத்தை நிர்மாணிக்க யோசனை. எதிர்வரும் வருடங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

*பால் உற்பத்தியில் ஈடுபடும் பண்ணையாளர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் திட்டம்

*பெண்களை வலுப்படுத்துவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

*வடக்கு, கிழக்கில் வீடில்லாத குடும்பங்களை மீள்குடியேற்ற 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

*நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத விளை நிலங்களில் வேறு பயிர்களை பயிரிட யோசனை.

*வடக்கு கடலில் மீன் அறுவடையை அதிகரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*தொழிற்கல்வி நிறுவனங்களை மாகாண சபைகள் வசம் கொண்டுவர நடவடிக்கை
2034 ஆம் ஆண்டளவில் சகலருக்கும் ஆங்கில எழுத்தறிவை பெற்றுக்கொடுக்கும் 10 வருட வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி திட்ட முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்த யோசனை.

*உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்காக புதிதாக 4 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை.

*கிராமப் புறங்களில் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனர்நிர்மாணிக்க 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்கும் வேலைத்திட்டம்.

*பிம்சவிய வேலைத்திட்டத்தை விரைவாக பூர்த்தி செய்வதற்கு வசதிகளை பெற்றுக்கொடுக்க 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.