November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்!

திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நிலாவெளி முதல் பானம வரையிலான விரிவான சுற்றுலாத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (08) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியினால் அபிவிருத்தியடைந்துள்ளது. ஆனால் பொருளாதாரம் இன்னும் வலுவாக இல்லை. அடுத்த 10 வருட திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பொருளாதார ரீதியாக பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். மகாவலி திட்டத்தின் ஊடாக இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன திட்டமிட்டிருந்தார். ஆனால் யுத்தம் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை. தற்போது திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுடன் இணைந்து பாரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பியகமவில் 400 ஏக்கர் முதலீட்டு வலயம் உள்ளது. ஆனால் திருகோணமலை 1000 ஏக்கர் முதலீட்டு வலயத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகம் முறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கான திட்டத்தை சுபானா ஜூரான் சிங்கப்பூர் நிறுவனம் தயாரித்துள்ளது. அதனை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அப்போது திருகோணமலை பாரிய நகரமாக உருவாகும். மேலும் இது பொருளாதார ரீதியாக வலுவான மையமாக மாறும். மறுபுறம், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.
வியாளேந்திரன், செங்கலடி மத்திய மகா வித்தியாலய அதிபர் தேவதாசன்
குகதாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.