November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை அச்சுறுத்தும் காலநிலை: மீட்புக் குழுக்கள் தயார் நிலையில்!

இலங்கையில் பல மாவட்டங்களிலும் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் 112 பிரதேச செயலக பிரிவுகளில் 7694 குடும்பங்களை சேர்ந்த 27,617 பேர் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவசர நிலைமைகளின் போது செயற்படக் கூடிய வகையில் 23 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அத்தனுகல, களுகங்கை, நில்வலா கங்கை, கிங் கங்கை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் தாழ்நில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் மீட்புக் குழுக்கள், நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.