November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து வெளிவிவகார அமைச்சரின் அறிவித்தல்!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

இந்த புதிய சட்டம் சாதகமான மட்டத்தில் திருத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் சட்டங்களைத் திருத்தவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் ஒரு பொறிமுறை உள்ளது. எனவே அந்த முறைகளுக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, இந்த சட்டம் குறித்த புரிதலை நாட்டு மக்கள் அனைவரும் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற இந்த புதிய சட்டத்தை, இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ விரைவாக வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, இந்நாட்டு மக்களுக்கு இந்த சட்டம் தொடர்பில் கருத்துவேறுபாடுகள் இருப்பின், ஒரு வாரத்திற்குள் அதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

உயர் நீதிமன்றத்திற்கு தனியான, விசாரணை நீதிமன்ற அதிகாரம் உள்ளது. அதன் பிரகாரம் உயர் நீதிமன்றம் வழங்கக்கூடிய அறிவுறுத்தல்களின்படி, மேலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த புதிய சட்டம் ஏற்கனவே உள்ள சட்டத்துடன் ஒப்பிடும்போது மிகவும் முற்போக்கான புதிய விடயங்களுடனேயே திருத்தப்பட்டுள்ளது.என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.