உண்மையைத் தேடுவது மட்டுமல்ல, கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடும் இலங்கைக்கு இருக்கின்றது என்று ஐநா மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் திங்கட்கிழமை ஆரம்பமானது.
இதன்போது தனது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால மீறல்களை ஏற்றுக்கொள்வதும், நம்பகமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இலங்கை அதிகாரிகளின் கடப்பாடாக இருக்க வேண்டும். அதேபோன்று பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் இந்த சபையும் உறுப்பு நாடுகளும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முழுமையாக கையாளும் நடவடிக்கைகளுக்கு என இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தாம் ஆதரவளிப்போம் என்றும் மனித உரிமைகள் பேரவை பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.