
நாட்டில் பல பாகங்களிலும் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அதேபோன்று மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.