இலங்கை முழுவதும் பல மாவட்டங்களிலும் தொடரும் கடும் மழையுடன் கூடிய காலநிலையை தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப்பகுதிகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை தொடரும் மழையால் காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் அடுத்து வரும் மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.