October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் ஊரடங்கு 9 ஆம் திகதி வரை நீடிப்பு

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டது.

வார இறுதியில் ஊரடங்கை அமுல்படுத்தி நாளை அதிகாலை 5 மணி முதல் அதனை தளர்த்துவதற்கே ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், மாகாணத்தில் தொடர்ந்தும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி 9 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குருநாகல் நகரிலும், குளியாப்பிட்டிய மற்றும் எஹலியாகொட பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை காலை 5 மணி முதல் முதல் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தி  முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சுகாதார துறை, பாதுகாப்பு தரப்பு, ஊடக நிறுவனங்களை ஆகியன அடங்கலாக 84 நிறுவனங்களின் உழியர்களுக்கு பணிகளுக்கு செல்ல முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.