அமெரிக்க இராஜாங்க செயலாளரை இலங்கை அரச தலைமைகளில் ஒருவர் மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டதாலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் மைக் பொம்பியோவுக்கிடையேயான சந்திப்பு இடம்பெறவில்லை என பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
மைக் பொம்பியோ மற்றும் பிரதமர் மகிந்தவுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறாமை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறான நிலையில், பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சந்திக்காமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மகிந்த மற்றும் பொம்பியோவுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெறுவது குறித்து எவ்வித திட்டமும் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே , இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொம்பியோவைச் சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.