May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெரும்பான்மை பலத்தை இழக்கும் அரசாங்கம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாளைய தினம் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்கள் பலர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீன எம்.பிக்களால் செயற்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி 145 ஆசனங்களை பெற்றது. இந்நிலையில் வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் கட்சி பக்கத்திற்கு 151 ஆசனங்கள் கிடைத்திருந்தன.

இந்நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளது.

அதேபோன்று முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரும் அவர்களின் கட்சி உறுப்பினர்களும் சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

இந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 50 ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.