May 13, 2025 12:50:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் ரணில் விடுக்கும் வேண்டுகோள்!

இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைவாக அரசாங்கம் தனது திட்டத்தை முன்வைப்பது அவசியமானது என்றும், இதனால் உடனடியாக பாராளுமன்றத்தில் அது தொடர்பில் விவாதத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை, மார்ச் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வீதம் குறைந்தமை, கடன் வீதம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி கொவிட் பரவல் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் வரி குறைப்பினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அத்துடன் பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.