January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கை மீது மைக் பொம்பியோ பிரயோகிக்கவில்லை; விமல் வீரவன்ச

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான இந்த அரசு கோழைத்தனமானது அல்ல. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக் கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “அரசியல் ரீதியாக அநாதைகளாகியுள்ள சஜித் தரப்பும், ஜே.வி.பியும் பொம்பியோவின் விஜயத்தின் போது பெரியளவில் பதற்றமடைந்த போதிலும் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க போன்ற கோழைகள் ஆட்சியில் இருந்திருந்தால் பொம்பியோவின் விஜயத்தின்போது பதற்றமடைந்திருக்க வேண்டும். ஏனெனில் உலக வல்லாதிக்க நாடுகளின் தாளத்திற்கு இவ்வாறான கோழை ஆட்சியாளர்கள் ஆடக்கூடியவர்கள்.

நாட்டின் ஆட்சியாளர் முதுகெலும்புடைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றால், உலக வல்லரசு என்றாலும் அழுத்தங்களைப் பிரயோகிக்காது.

இந்த அரசு நாட்டின் இறைமை, பௌதீக ஒருமைப்பாடு என்பன குறித்து மிகுந்த கரிசனையுடையது.

மைக் பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது  பிரயோகிக்கவில்லை. இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தைரியமிக்க ஆட்சியே காரணம்” என்று  தெரிவித்துள்ளார்.