May 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சொந்த நாட்டில் வீடற்ற நிலையில் இருக்கும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்’: பிரதமர் மகிந்த

தாய் நாட்டில் வீடற்ற நிலையில், விடுதியில் வாழ்வது போன்று வாழும் யுகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 800 பேருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் களனிவெலி புகையிரத பாதையை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் போது அகற்றப்பட்ட மக்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட 528 வீடுகளை கொண்ட கொலொம்தொட சரசவி உயன தொடர் மாடிக் குடியிருப்பை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீடற்ற நிலையில் வாழும் யுகத்தை எதிர்வரும் ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவருவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இரு படுக்கையறைகள் உள்ளடங்களாக சகல வசதிகளையும் கொண்ட இந்த 528 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 1900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதன்போது பயனாளர்கள் ஐவருக்கு வீட்டின் திறப்புகள் பிரதமரினால் கையளிக்கப்பட்டன.

வீடற்ற மக்களுக்கு அவர்களின் தாயகத்தின் உண்மையான உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இனப் பாகுபாடு கிடையாது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.