November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்: இலங்கைக்கு மேலும் நான்கு பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை மேலும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் உலக பளுதூக்கல் மற்றும் பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 74 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட இந்திக திஸாநாயக்க, ஸ்னெட்ச் முறையில் 130 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 156 கிலோ எடையையும் என மொத்தமாக 286 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், மலேஷியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது

இதனிடையே, ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் மதுவன்த விஜேசிங்க 254 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதில் அவர் ஸ்னெட்ச் முறையில் 113 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 141 கிலோ எடையையும் தூக்கியிருந்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 61 கிலோ கிராம் எடைப் பிரவில் பங்குகொண்ட நதீஷானி ராஜபக்‌ஷ வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் சின்தன கீதால் விதானகே, 300 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதில் அவர் ஸ்னெட்ச் முறையில் 134 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 161 கிலோ எடையையும் தூக்கியிருந்தார். இதன்படி, இலங்கை இதுவரை ஒரு தங்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

முன்னதாக பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வெற்றிப்பெற, ஆண்களுக்கான 61 கிலோ கிராம் எடைப் பிரிவில் திலங்க பலகசிங்ஹ வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.