
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், சங்கமன்கண்டி கோமாரி எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு பிக்குகளால் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, பொதுமக்களின் கடும் எதிர்ப்புகாரணமாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சங்கமன்கண்டி கோமாரி பிரதேசத்தின் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் பாதுகாப்புடன் சென்ற பிக்குகள் குழுவொன்று அங்கு புத்தர் சிலையை வைத்த நிலையில், அதற்கு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலைமை காரணமாக அங்கு அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மக்கள் போராட்டம் காரணமாக அந்த புத்தர் சிலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பிரதேசத்திற்கு சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.