பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் வழக்கு தொடர்பில் ஆஜராகவுள்ள சிறப்பு வழக்கறிஞர் குழு சியால்கோட் காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீதான விசாரணையை விரைவில் முடித்து, 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் குழுவுக்கு பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார், உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று(10), லாகூரிலிருந்து சியால்கோட் வரும் இந்த சிறப்பு வழக்கறிஞர் குழு, ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் சென்று தொழிற்சாலையையும் ஆய்வு செய்யும் என செய்தி மேலும் கூறுகின்றது.
சம்பவம் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கமராக்களில் இருந்து பெறப்பட்ட 12 மணி நேர காட்சிகளை பொலிஸார் வழக்கு விசாரணைக்காக வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்த குமாரவின் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 139 பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் 34 பேர் முக்கிய சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குஜ்ரன்வாலாவின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது 15 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வியாழன் அன்று, சந்தேக நபர்களின் முகங்கள் தாக்குதலின் போது பெறப்பட்ட காணொளிகள் மூலம் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.