சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐநா அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
குறித்த போராட்டத்தில் ‘சர்வதேசமே எமக்கு நீதிபெற்று தர வேண்டும், எமக்கு இழப்பீடு வேண்டாம் மரணச் சான்றிதழ் வேண்டாம், ஓ.எம். பி. வேண்டாம் எமக்கு எமது பிள்ளைகள் மட்டுமே வேண்டும்’ என்ற கோஷங்களை எழுப்பியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டிருந்தார்.
வவுனியாவில்
வவுனியா வலிந்து ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி, மணிக் கூட்டுகோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்தது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.
மன்னாரில்
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.