பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.
இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 6ஆம் திகதி பிம்ஸ்டெக் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார் லெக்ப்ஹெல்.
2018 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிம்ஸ்டெக்கின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்தது. அக்காலத்தில் ஆரம்ப உறுப்பினராக இருந்து கொண்டு பிம்ஸ்டெக் அமைப்புக்காக இலங்கை வழங்கிய ஒத்துழைப்பை பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் பாராட்டியிருந்தார்.
பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பிம்ஸ்டெக் அமைப்பின் பிரதிபலன்கள் நேரடியாக வழங்குவதற்கு அங்கத்துவ நாடுகளுடனும் பொதுச் செயலாளர் அலுவலகத்துடனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.
இலங்கைக்குரிய பிரதான பிரிவுகளான விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவு என்பவற்றுக்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை ஓரிரண்டு மாதங்களில் முன்வைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை காரணமாக குறித்த தினத்தில் நடத்துவதற்கு முடியாமல் போன ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டை, எதிர்வரும் வருடத்தின் முதல் காலாண்டில் நடத்த முடியுமாகுமென்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பிம்ஸ்டெக் செயலகத்தின் பணிப்பாளர்களான ஹூசைன் முஷாரஃப் (Hossain Mosharaf), மஹிசினீ கொலொன்னே (Mahishini Colonne) ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.