கொவிட் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 20 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கொவிட் – 19 சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தாய் அல்லது தந்தையின் இறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் சிறுவன் அல்லது சிறுமியின் பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி, கிராம சேவையாளர் பிரிவு கிராம சேவையாளரினால் உறுதிப்படுத்தல் கடிதம் மற்றும் பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப உறையின் மேல் இடது மூலையில் “கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திலிருந்து கல்விப் புலமைப் பரிசில்களை வழங்குதல்” என்று குறிப்பிடப்பட வேண்டும் என ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, ‘செயலாளர், கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.