January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நாட்டின் சுயாதீனத் தன்மை, இறைமையை விட்டுக்கொடுக்க மாட்டேன்” – கோட்டாபய

”சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத் தன்மை, இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தான் ஒருபோதும் தயாராக இல்லை” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவியதாகவும், இதன்மூலம் இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கையின் தற்போதைய தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல எனவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதே என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழு இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை விளக்கியுள்ள ஜனாதிபதி, அது நடுநிலைமையை அடிப்படையாக கொண்டதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவிவரும் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர் அபிவிருத்தி மட்டத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் இலங்கையுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ள இராஜாங்க செயலாளர் பொம்பியோ, நாட்டினுள் அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அதிக முன்னுரிமையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, சர்வதேச மன்றங்களில் மனித உரிமைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா டெப்லிட்ஸ், உதவி இராஜாங்க செயலாளர் பிரியன் புலதாவோ, தெற்கு மற்றும் மத்தியாசிய நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் தலைமை பிரதி உதவிச் செயலாளர் டீன் தொம்ஸன் மற்றும் இராஜாங்க செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர் மேரி கிசல் ஆகியோர் அமெரிக்க தூதுக்குழுவின் முக்கிய உறுப்பினர்களாவர்.

வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ரவிநாத் ஆர்யசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.