November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரியந்தவை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு சான்றிதழ்!

(Photo ; Twitter /@PakPMO)

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற அந்நாட்டு பிரஜை மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழை வழங்கி வைத்தார்.

அத்தோடு அட்னானுக்கு பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான இரண்டாவது மிக உயர்ந்த விருதான தம்கா-இ-ஷுஜாத் விருது மார்ச் 23 அன்று வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

இலங்கை பிரஜை பிரியந்த குமாரவிற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அட்னானின் துணிச்சலைப் பாராட்டினார், “நாட்டில் மாலிக் அட்னானியை போன்ற முன்மாதிரிகள் முக்கியம், ஏனென்றால் மக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள் ” என்று பிரதமர் கூறினார்.

​​“மாலிக் அட்னானின் துணிச்சல் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு” என்று தெரிவித்த பிரதமர் “உடல் சக்தியை விட தார்மீக சக்தி பெரியது” என்று குறிப்பிட்டார்.

“அந்த மிருகங்களுக்கு எதிராக மாலிக் அட்னான் நின்ற விதத்தை நமது இளைஞர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” எனவும் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

குமாரவின் குடும்பத்திற்கு வழங்குவதற்கான நிதி வசூலிக்கப்பட்டுள்ளதோடு, அவரது மாதச் சம்பளத்தை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு வழங்குவதற்கும் சியால்கோட்டின் வணிக சமூகம் முன்வந்துள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Image