தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பிராந்தியத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே நல்ல ஒருங்கிணைப்பு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வல்லரசு நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளால் மாத்திரமே, அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது மிகவும் கடினமான சந்தர்ப்பமாகும் என்று எடுத்துரைத்துள்ள ஜனாதிபதி, தொற்று நோயால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளுக்கு கடன் மன்னிப்பு வழங்கல், மறுசீரமைப்பை மேற்கொள்ளல் அல்லது கடன் நிவாரணக் காலங்களை வழங்க வல்லரசு நாடுகளும் பலதரப்பு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் நிலையமாகக் காணப்படுவதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்றும், இதில் போதைப்பொருள் வியாபாராமானது பிராந்திய நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளதென்றும் கூறியுள்ள அவர், புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், இவ்வாறான ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது என்றும் இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து இல்லாதொழிக்கவில்லையாயின், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றன சுலபமாக இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.