July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவுடனான உடன்படிக்கைகள் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது’ – பொம்பியோ

சீனா இலங்கையுடன் செய்துகொண்டுள்ள ஒரு சில உடன்படிக்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று வெளிவிவகார அமைச்சில் கலந்துகொண்ட இணை ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் அமெரிக்காவின் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதே தமது விஜயத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். .

இந்த விஜயத்தின் போது, இலங்கையுடன் பரந்த மட்டத்திலான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், இதில் இலங்கையின் கடல் வலயம் சார்ந்த விடயங்களில் அதிக அக்கறை செலுத்தப்பட்டதோடு, பாதுகாப்புப் படைகள் கூட்டுப் பயிற்ச்சிகளை முன்னெடுப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கையின் கடல் எல்லையை பாதுகாக்க கடல் பாதுகாப்பு கப்பல்கள் இரண்டை வழங்கவும்  நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்  இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை மக்களின் இறையாண்மை, சுதந்திரம் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த நாட்டின் அபிவிருத்தியே எமது இலக்காக உள்ளது. இவற்றையே அமெரிக்க மக்கள் இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, அமெரிக்க தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும்  ஆராய்ந்து பார்ப்பதாகவும் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சீனாவின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிட்ட அவர்,  சீனாவின் இலங்கை மீதான பார்வையும், வேலைத்திட்டமும் மாறுபட்டதொன்றாகும் என்றும், சீனா இலங்கையுடன் செய்து கொண்டுள்ள ஒரு சில உடன்படிக்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.