நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மீக வளர்ச்சியும் அவசியம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த நாம், எதிர்கால சாசனத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க வேண்டும் என நம்புவதாக அவர் கூறினார்.
பௌத்த தர்மத்தில் மாற்றம் செய்யாது பாதுகாக்கவும், சங்க சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்து பாதுகாக்கவும், விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கவும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த தமது அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அத்தோடு பிற அனைத்து வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சிக்கும், மதகுருமார்களின் கல்வி நலனுக்காகவும் பாடுபட்டுள்ளோம்.
சமய விழுமியங்களை சமூகமயமாக்குவதற்காக அறநெறி பாடசாலை அமைப்பை வலுப்படுத்துவதற்காக பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்களின் ஊடாக வருடாந்தம் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகிறது.
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழும் சமூகத்தை உருவாக்கவும் இதையெல்லாம் செய்வதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தேசிய அருங்காட்சியகத் துறையை மறுசீரமைத்து தேசிய அடையாளத்தை எதிர்கால சந்ததியினருக்கு உரிமையாக்கி தமது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் பாவனை மற்றும் பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு, சமயப் பின்னணியின் கீழ் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டத்தை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.