January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை!

இலங்கையில் நாளாந்தம் அதிகளவிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாதமை இவ்வாறு தினசரி கொவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த கவலைக்கிடமான நிலை குறித்து கல்வி அமைச்சு உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகள் சரியான முன் ஏற்பாடுகள் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலை சூழலில் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் சொந்த செலவில் கொவிட் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படடுள்ளதாக அவர்கள் குறித்த கடிதத்தில் தெரிவித்தனர்.

எனவே இதற்கான செலவுகளை வழங்கும்படியும் பணியில் இருக்கும் போது விடுமுறையை பெறுவது குறித்து உடனடியாக சுற்றறிக்கை வெளியிடும் படியும் இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

இதனிடையே நாட்டில் இன்று (23)  மேலும் 740 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 558,860 ஆக பதிவாகியுள்ளது.

அத்தோடு, நாட்டில் மேலும் 24 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 14,182ஆக அதிகரித்துள்ளது.