அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கையினால் நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் அபாயகரமான நிலை உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அநுராதபுரம் மேற்கு பேமடுவ பிரதேச விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்தார்.
இந் நாட்டின் வரலாற்றில் எப்பொழுதும் பிதற்றாத பெருமைக்குரியவர்கள் விவசாயிகள் எனவும், இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“விவசாயத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது இந்த அரசாங்கத்தின் பேரழிவான செயலாகும். விவசாயிகள் தற்போது எதிர் நோக்கும் நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள விவசாய புரட்சியினாலேயே இயலும்” என்றார்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தரமான விதைகள் மற்றும் உள்ளீடுகளைக் கொண்ட ஏற்றுமதி சார்ந்த விவசாயத்தை மேம்படுத்துவதே தனது முதன்மையான பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப புரட்சி மூலம் இந்நாட்டில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்களின் கையில் பணம் இருக்கும்போது, இது சார்ந்த செயற்பாட்டு ரீதியான ஆற்றலை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு முறையான முகாமைத்துவ திட்டமே தேவை என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரசியல் தலைவர்களின் பதவிகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்காது, மாறாக மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு பலமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.