July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிகரெட் விற்பனை 25 மில்லியனால் குறைவடையும் என நம்பிக்கை!

cigarette

இலங்கையில் சிகரெட்  மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கத்திற்கு அடுத்த ஆண்டில் பெரும் அளவு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் சிகரெட்  பாவனை எதிர்வரும் ஆண்டில் 25 மில்லியனால் குறைவடையும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் சமாதி ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டின் கடந்த ஆண்டு மொத்த சிகரெட்  விற்பனையின் 1.1 வீதம் ஆகும் என சமாதி ராஜபக்ஸ கூறினார்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, நாள் ஒன்றுக்கு 70,000 சிகரெட்களின் விற்பனை குறைவடையும் அதேவேளை, இதன் காரணமாக அரசுக்கு வருடாந்தம் 8 பில்லியன் நேரடி வருமானம் கிடைக்கப் பெறும் எனவும் குறிப்பிட்டார்.

எனினும் இந்த வரி அதிகரிப்பு காரணமாக, சிகரெட் உற்பத்தியாளர்களுக்கு எவ்வித வருமான அதிகரிப்பும் கிடைக்காது என சமாதி ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்தோடு மதுபானங்களின் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கத்திற்கு 25 பில்லியன் ரூபா நேரடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் அதிகமாக விற்பனையாகும் மதுபான வகையின் விலை லீட்டர் ஒன்றுக்கு 420 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் பியர் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிகரெட்டுகளுக்கான வரி 3 ஆண்டுகளின் பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, மதுபானங்களின் விலை இறுதியாக 2019 ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் சமாதி ராஜபக்ஸ தெரிவித்தார்.