சர்வதேச மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப கடல்சார் சட்டம் தொடர்பான சட்ட விதிகளை அடையாளம் கண்டு புதுப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்க இலங்கையின் சட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் ஊடாக நாட்டை மேம்படுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவர் பதவியை ஜனாதிபதி சட்டத்தரணி சந்தன ஜயசுந்தரவிடம் வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இந்த துறை தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பீ.ஜே.ரத்நாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் குழுக்கள் வழங்கிய பரிந்துரைகள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிய வருகிறது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.டி.நிவ் டயமன்ட் மற்றும் எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல்கள் தொடர்பான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய விதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு அதிகரித்துள்ளது.