போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் துனிசியா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதுடைய பெண்மணி ஒருவரே இவ்வாறு போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்மணி தனது பயணப் பொதிகள் பலவற்றில் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தமை சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 180 மில்லியன் ரூபா பெறுமதியான 4 1/2 கிலோ கிராம் கொகேய்ன் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
துனிசியாவில் இருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து டோஹாவிற்கு சென்று பின் கட்டார் எயார் விமானத்தில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
சந்தேகநபர் சுங்க பிரிவினரின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக சர்வதேச நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி போலி ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலத்தில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய அளவிலான கொக்கெய்ன் தொகை இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.